காலச்சுழற்சிகளில் வசந்த காலம் மறைந்து இலையுதிர்காலத்தில் உடல் வலிமை, மன வலிமை குறைந்து ஆயிரம் ஏக்கங்களுடனும் வலிகளுடனும் தன் நாட்களை கழிக்கும் முதியவர்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?
அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பங்களாய் வாழ்ந்த காலத்தில் முதுமையிலும் குடும்பத்தில் அவர்களுக்கு பங்கிருந்தது. ஆக்கப்பூர்வமான சிறுசிறு வேலைகள் உற்சாகத்தைத் தந்து அவர்கள் மனதை பாதுகாத்தன. பேரக்குழந்தைகள் அவர்களுக்கு பாரமாக இருந்ததில்லை. ஆனால் இன்றோ, மகன் மருமகள் தத்தம் பணிகளுக்குச் செல்வதால் அவர்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது அவர்களுக்கு முழு நேர கடமையாகி விடுகிறது. வயதின் சுமை, பல வருட உழைப்பு இவைகளெல்லாம் தினசரி வேலைகளை சுவாரஸ்யமே இல்லாததாக ஆக்கி விடுகின்றன. இன்னுமே உழைப்பா, இனியும் ஓய்வில்லையா என்ற கேள்விகளும் சார்ந்திருத்தலும் அவர்களை தளர வைத்து விடுகின்றன.
ஒரு ஹிந்திப் படம். பெயர் நினைவில்லை. அமிதாப் பச்சன் நடந்து போகும்போது சற்று தடுமாறுவார். அருகில் இருந்த மகன் அவரைத் தாங்கி உதவும்போது அமிதாப் அந்த உதவியை மறுப்பார். அப்போது அந்த மகன் ‘ நான் சின்னப் பையனாக இருந்தபோது இப்படி தடுமாறியபோது நீங்கள்தானே என்னை நடை பழக்கி என்னை தடுமாறாமல் நடக்க வைத்தீர்கள். அதை இப்போது நான் உங்களுக்குச் செய்யக் கூடாதா?’ என்று கேட்பார். இந்த அன்பும் அக்கறையும் பரிவும் ஒவ்வொரு மகனிடமும் மருமகளிடமும் இருக்குமானால் இன்றைக்கு முதியோர் இல்லங்கள் பெருகியிருக்கத் தேவையில்லை.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு முதியோர் இல்லத்திற்குச்சென்று அங்குள்ள அனைவருக்கும் உணவளித்தபோது மனம் அப்படியே கனத்துப் போனது. எத்தனை வலி அந்த கண்களில்! அந்த இல்லத்தில் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்தான். அடிக்கடி போவதால் அதைப்பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் கவனிப்பும் வேளாவேளைக்கு சாப்பாடும் மட்டும் அவர்களுக்கு இந்த வயதில் போதுமா? கருணை மட்டும் அவர்களுக்கு மன நிறைவைத் தந்து விடுமா?அவர்களின் மன வலி எதனால் போகும்? தன் ரத்த உறவுகளின் அன்பான கவனிப்பினால்தானே போகும்? இது ஏன் இன்றைய இளம் ரத்தங்கள் நிறைய பேருக்கு புரிவதில்லை? வயதாக வயதாக, ஒரு சிறு குழந்தையின் மனமும் உடலுமாக, உடல் குறுகி, நோய் பெருகி தள்ளாட்டமாய் நடக்கையில் அவர்கள் நெஞ்சில் தேன் வார்ப்பது எது? அவர்களின் பிள்ளைகளின் அன்புதானே?
உட்கார்ந்து நலம் விசாரித்து, அன்பும் அக்கறையுமாக பேசக்கூடிய மகன்கள் இன்றைக்கு குறைந்து வருகிறார்கள். தலைமுறை இடைவெளியை மதிக்கத் தெரிந்த இளையவர்கள் இன்று பெரும்பாலும் அருகிவிட்டார்கள். சுயநலம், அவசர யந்திரத்தனமான வாழ்க்கை, இதெல்லாம் தன்னைப் பெற்று வளர்த்தவர்களையே மறக்க வைக்கிறது.
ஒருமுறை எங்கள் குடும்ப நண்பர் என்னிடம் ‘நீங்களெல்லாம் மஞ்சள் குங்குமத்துடன் போய்ச்சேர வேண்டும் என்பீர்கள்! அது எத்தனை சுய நலம்! இத்தனை வருடங்கள் உங்களையே சார்ந்து வாழப் பழகி விட்டோம். எங்களுக்கு உடல் நலமில்லாது படுக்கையில் சாய்ந்தால் திருமணமாகிச் சென்று விட்ட மகளும் துடைத்து விட முடியாது. மருமகளும் செய்ய முடியாது. ஆனால் நாங்களே இல்லாமல்போனால்கூட, அவர்களால் உங்கள் உடம்பை துடைக்கவும் வாந்தி எடுத்தால்கூட அருவருப்பிலாமல் செய்யவும் முடியும்’ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.
இங்குதான் நான் இன்றைய இளம் பெண்களிடம் வருகிறேன்.
உங்களை எப்படி உங்கள் பெற்றோர் அருமை பெருமையாக வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்கிறார்களோ, அதே மாதிரிதான் உங்கள் கணவரைப் பெற்றவர்களும் சீரும் சிறப்புமாக வளர்த்து தங்கள் மகனை உங்கள் கையில் ஒப்படைக்கிறார்கள். உங்கள் பெற்றோர் உங்களைப் பிரிந்த போது அவர்களுக்கு எந்த அளவு மன வலி இருந்ததோ, அதே அளவு உங்கள் கணவரைப் பெற்றவர்களும் மன வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் இன்னும் கொடுமை, அவர்கள் மகனுடன் அருகிலேயே இருந்தாலும், மனதால் அவனைப் பிரிந்திருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த விலகல் மகனுக்குத் திருமணம் செய்யும் ஒவ்வொரு தாயுன் தந்தையும் அனுபவிப்பதுதான். படித்தவர்களும், அனுபவமடைந்தவர்களும், அதிக சகிப்புத்தன்மை உடையவர்க்ளும் இந்த விலகலை சமாளித்துக் கொள்கிறார்கள். பக்குவமற்றவர்களாலும் அனுபவம் குறைந்தவர்களாலும் திடீரென்று வந்த இந்த விலகலை சீரணித்துக்கொள்ள முடிவதில்லை.
நீங்கள் எப்படி இப்போது உங்கள் குழந்தையை சீராட்டி வளர்க்கிறீர்களோ, அதே மாதிரிதான் அவர்கள் 30 வயது வரை தங்கள் மகனை வளர்த்து உங்களிடம் ஒப்படைக்கிறார்கள். அதுவரை இருந்த நெருக்கம், மனம் திறந்த பேச்சு, பகிர்தல் எல்லாமே திடீரென்று குறையும்போது அந்த மாமியாரால் அதை சமாளிக்க முடியாமல் திணறுகிறாள். தோழமைக்கு நேரம் குறையும்போது மாமனாருக்கோ மகனின் விலகல் சோர்வைக் கொடுக்கிறது. கோபம், ஆங்காரம், போட்டி, பொறாமை, பாதுகாப்பின்மை, கொந்தளிப்பு-இதெல்லாம் உருவாகுவது இப்படித்தான்.
இதன் காரணமாக அவர்கள் வார்த்தைகளை வீசி இறைப்பதையும் கோபத்தில் கொந்தளிப்பதையும் குறைகள் எதற்கெடுத்தாலும் கண்டுபிடிப்பதையும் நான் நியாயமென்று சொல்ல வரவில்லை. பாதுகாப்பின்மையென்ற உணர்வினால் அவர்கள் செய்கிற தவறுகளை நீங்கள் மன்னிக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் செய்கின்ற தவறுகளை கண்ணீருடனோ அல்லது மென்மையாகப் பேசியோ அவர்களை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுவரை வளர்ந்த இடத்திலிருந்து ஒரு செடியை அப்படியே வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வைப்பதுபோல, புதிய இடத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்த உங்களுக்கு கடுஞ்சொற்களும் அலட்சியப்போக்கும் நிச்சயம் காயப்படுத்தும்.
ஆனால் மனித இதயம் அளவற்ற கருணையால்தான் முழுமை அடையும். உங்களுக்கு மன வலிமையும் உடல் வலிமையும் அதிகம். அவர்களை சிறு குழந்தையாக எண்ணி உங்களின் உள்ளத்துக் கருணையெல்லாவற்றையும் அவர்களிடம் காண்பியுங்கள். ஒரு தாயாக அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். உள்ளம் குளிர அவர்கள் சிரிக்கும் சிரிப்பு உங்களை பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வைக்கும். குடும்பம் ஒரு கோவிலாக இருந்தால் முதியோர் இல்லங்கள் எப்படி பெருகும்? ஆதரவு யாருமே இல்லாது போனவர்களுக்குத்தான் முதியோர் இல்லங்கள். ரத்தமும் சதையுமாக பெற்ற மக்கள் இருப்பவர்களுக்கு அல்ல.
நன்றிகள்: http://muthusidharal.blogspot.in/2010/04/blog-post_07.html
No comments:
Post a Comment